TN 6 SST

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.3 வேலுநாச்சியார்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.3 வேலுநாச்சியார்

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.3 வேலுநாச்சியார்

மதிப்பீடு

 

Question 1.
வேலுநாச்சியார் ஐதர்அலியின் உதவியை எவ்வாறு பெற்றார்?
Answer:
வேலுநாச்சியார் ஐதர் அலியின் உதவியைப் பெற்றமை:


(i) வேலுநாச்சியார் இராமநாதபுரத்தை ஆண்ட செல்லமுத்து மன்னரின் ஒரே மகள். அவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்துகொண்டார். முத்துவடுகநாதர், காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார். சிவகங்கையை மீட்க வேலுநாச்சியார் திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.

(ii) வேலுநாச்சியார், மைசூர் சென்று ஐதர் அலியைச் சந்தித்து உருதுமொழியில் ஆங்கிலேயர்களை எதிர்ப்பது பற்றிப் பேசினார். வேலுநாச்சியாரின் உருதுமொழித் திறமையைக் கண்ட ஐதர்அலி உதவி செய்வதாக உறுதியளித்தார். அதன்படி ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களை அனுப்பி வைத்தார்.

(iii) அப்படை வீரர்களுடன் மருது சகோதரர்களின் தலைமையில் வேலுநாச்சியார் படை புறப்பட்டது. முதலில் காளையார்கோவிலை மீட்டார். பிறகு சிவகங்கையையும் மீட்டார்.

Question 2.
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக.
Answer:
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வு
முன்னுரை :
வேலுநாச்சியார் இராமநாதபுரத்தை ஆண்ட செல்லமுத்து மன்னரின் ஒரே மகள். வேலுநாச்சியார் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளைக் கற்றார். சிலம்பம், குதிரையேற்றம், வாள்போர், வில்பயிற்சி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். அவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்துகொண்டார்.

முத்துவடுகநாதர் மரணம் :
காளையார் கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார். வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.

ஆலோசனைக் கூட்டம் :
திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் வேலுநாச்சியார், அமைச்சர் தாண்டவராயன், தளபதிகளாகிய பெரிய மருது, சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர். சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால், எப்படியாவது சிவகங்கையை மீட்க வேண்டும் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஐதர்அலி அனுப்பிய ஐயாயிரம் படை வீரர்கள் வந்தனர். அடுத்தநாள் சிவகங்கையை மீட்கப் புறப்படலாம் எனத் திட்டமிட்டனர்.

போர்த்திட்டம் :
முத்துவடுகநாதர் காளையார் கோவிலில் கொல்லப்பட்டதால் முதலில் காளையார் கோவிலைக் கைப்பற்றிய பிறகு சிவகங்கையை மீட்கவும் திட்டமிட்டனர். அதன்படி ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர்.

காளையார் கோவிலைக் கைப்பற்றுதல் :
திட்டமிட்டபடி காளையார்கோவிலில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போரின் இறுதியில் ஆங்கிலேயரின் படையை தோற்கடித்து காளையார் கோவிலை வேலுநாச்சியார் கைப்பற்றினார்.

வேலுநாச்சியாரின் திட்டம் :
காளையார் கோவிலைக் கைப்பற்றியதும், உடனே சிவகங்கையைத் தாக்கலாம் என்று பெரிய மருது கூறினார். அதற்கு வேலுநாச்சியார் “அவசரம் வேண்டாம், இப்போது சிவகங்கை கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். வரும் விஜயதசமித் திருநாள் அன்று கதவுகள் திறக்கப்படும். அப்போது உள்ளே நுழையலாம்” என்றார். “விஜயதசமி நாளில் பெண்களுக்கு மட்டும் கோட்டைக்குள் செல்வதற்கு அனுமதியுண்டு. பெண்கள் பிரிவினர் கூடைகளில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றுடன் ஆயுதங்களை மறைத்துச் செல்லட்டும். அவர்கள் உள்ளே தாக்குதலைத் தொடங்கியதும் ஆண்கள் பிரிவினரும் கோட்டைக்குள் நுழைந்து தாக்கி ஆங்கிலேயரை விரட்டிவிடலாம்” என்றார்.

 

உடையாளுக்கு நடுகல் :
வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்குமாறு ஆங்கிலேயர்கள் உடையாள் என்னும் பெண்ணை வற்புறுத்தியும், அவள் மறுத்ததால் அவளைக் கொன்றுவிட்டார்கள். அவளுக்கு உரிய முறையில் சிறப்புச் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் தாண்டவராயன். வேலுநாச்சியாரின் உத்தரவின்படி நடுகல் நடப்பட்டது. வேலுநாச்சியார் சிவகங்கையை நோக்கிச் சென்றபோது வழியில் உடையாளின் நடுகல்லுக்குத் தாம் வைத்திருந்த தாலியை எடுத்துக் காணிக்கையாகச் செலுத்தி வணங்கினார். வீரர்கள் “உடையாள் புகழ் ஓங்குக” என்று முழங்கினர்.

குயிலியின் நாட்டுப்பற்று :
குயிலி பெண்கள் படைப்பிரிவுடன் மாறுவேடத்தில் உள்ளே சென்று ஆயுதக் கிடங்குக்குத் தீ வைத்தாள். வேலுநாச்சியார் படைவீரர்களுடன் கோட்டைக்குள் புகுந்தார். ஆங்கிலேயரின் படையுடன் கடுமையாகப் போரிட்டு வென்றார். ஆங்கிலப்படை 2 கோட்டையைவிட்டு ஓடியது. இவ்வெற்றிக்குப் பின் குயிலியின் உயிர்த் தியாகம் இருந்தது. 2 குயிலி தன் உடலில் தீ வைத்துக் கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்துவிட்டாள். தன் உயிரைக் கொடுத்து நாட்டை மீட்டுக் கொடுத்தாள் குயிலி. வேலுநாச்சியார், “அவளது துணிவுக்கும் தியாகத்திற்கும் வீரத்திற்கும் தலை வணங்குகிறேன்” என்று கூறினார்.

முடிவுரை:
வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர் அலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது.
மூன்றாம் பருவம்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *