Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்
Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.5 பெயர்ச்சொல்
கற்பவை கற்றபின்
Question 1.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் இடம் பெற்றுள்ள இடுகுறி, காரணப் பெயர்களை அறிந்து எழுதுக.
நீர் வற்றிப்போன குளத்தில் செந்தாமரை, ஆம்பல், கொட்டி, நெய்தல் முதலான கொடிகளும் வாடியிருந்தன. நீர் நிரம்பி இருந்தவரை ஊர் மக்களும், விலங்குகளும் மரங்கொத்தி போன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. காலை நேரம் சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. இப்போது அக்குளத்தைக் கண்டு கொள்வார் யாருமில்லை
Answer:
இடுகுறிப் பெயர் :
(i) குளம்
(ii) ஆம்ப ல்
(iii) கொட்டி
(iv) நெய்தல்
(v) சூரியன்
காரணப் பெயர் :
(i) மரங்கொத்தி
(ii) செந்தாமரை
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
அ) பறவை
ஆ) மண்
இ) முக்காலி
ஈ) மரங்கொத்தி
Answer:
ஆ) மண்
Question 2.
காரணப்பெயரை வட்டமிடுக.
அ) மரம்
ஆ) வளையல்
இ) சுவர்
ஈ) யானை
Answer:
ஆ) வளையல்
Question 3.
இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.
அ) வயல்
ஆ) வாழை
இ) மீன்கொத்தி
ஈ) பறவை
Answer:
ஆ) வாழை
குறுவினா
Question 1.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
Answer:
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
(i) பொருட்பெயர்
(ii) இடப்பெயர்
(iii) காலப்பெயர்
(iv) சினைப்பெயர்
(v) குணப்பெயர்
(vi) தொழிற்பெயர்
Question 2.
இடுகுறிப்பெயர் என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் இட்டு வழங்கிய பெயர் இடுகுறிப்பெயர் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று.
Question 3.
காரணப்பெயர் என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயர் காரணப்பெயர் ஆகும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை.
சிறுவினா
Question 1.
அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
Answer:
அறுவகைப் பெயர்ச்சொற்கள் :
(i) பொருட்பெயர் – மயில், பறவை
(ii) இடப்பெயர் – தெரு, பூங்கா
(iii) காலப்பெயர் – நாள், ஆண்டு
(iv) சினைப்பெயர் – இலை, கிளை
(v) பண்புப்பெயர் – செம்மை, நன்மை
(vi) தொழிற்பெயர் – ஆடுதல், நடித்தல்.
சிந்தனை வினா
Question 1.
இடுகுறிப்பெயர், காரணப்பெயர் ஆகியவற்றின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
Answer:
இடுகுறிப்பெயர் – பெயர்க்காரணம் : நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்டு வழங்கியவை இடுகுறிப்பெயர்கள் ஆகும். இவ்வகைப் பெயர்களுக்குக் காரணம் அறிய இயலாது. இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.
(i) இடுகுறிப் பொதுப்பெயர் : காரணம் ஏதுமின்றி, பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிப் பொதுப்பெயராயிற்று.
(எ.கா.) மரம், பழம்
(ii) இடுகுறிச் சிறப்புப்பெயர் : காரணம் ஏதுமின்றி, சிறப்புத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
(எ.கா.) தென்னை , வாழை
காரணப்பெயர் – பெயர்க்காரணம் : நம் முன்னோர்கள் காரணம் கருதி ஒரு பொருளுக்குப் பெயர் இட்டதனால் காரணப் பெயராயிற்று. இவை ஒரு காரணத்தின் அடிப்படையில் வழங்கிய பெயர்களாக இருக்கும். காரணப் பெயர் இரண்டு வகைப்படும். (எ.கா) நாற்காலி, கரும்பலகை.
(i) காரணப் பொதுப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பதால் காரணப் பொதுப்பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) பறவை, அணி.
(ii) காரணச் சிறப்புப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி.
மொழியை ஆள்வோம்
பேசுக
Question 1.
உங்கள் பகுதிகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் குறித்துப் பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம். நான் தொண்டு நிறுவனங்கள் பற்றிப் பேசவிருக்கிறேன்… இந்நிறுவனங்கள் சமூகத்தில் நிலவும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவை ஆகும். மக்களுக்குப் பல வகைகளில் இவை உதவி புரிகின்றன.
முதலில் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் பற்றிக் கூறுகிறேன். இது இந்திய அரசினால் நிறுவப்பட்ட சேவையாகும். இச்சேவை பாலர் கல்வி மற்றும் முதன்மையான சுகாதார பராமரிப்பு போன்றவற்றை ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வழங்குகிறது. இச்சேவை அங்கன்வாடி மையங்கள் மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இச்சேவை 1975 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. நோய்த்தடுப்பு, கூடுதல் ஊட்டச்சத்து, சுகாதார சோதனை, பரிந்துரை சேவைகள், முன்பள்ளி அல்லாத முறையான கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதுபோன்று தனியார் சேவை நிறுவனங்களும் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் தொடங்குவதற்கு உதவி செய்கின்றன. மூக்குக் கண்ணாடி வழங்குதல், பெண்களுக்கான சுயதொழில் உதவி, கல்விக்கான உதவி, நலிவுற்றோருக்கான தற்செயல் நிவாரணம் அளித்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றன. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் இலவச மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை இரத்ததான முகாம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை எளியோருக்கு உதவுகின்றன.
எங்கள் பகுதியில் உள்ள சமூக நிறுவனம் மரம் நடுவிழா, நிழற்குடை அமைப்பு, போன்றவற்றைச் செவ்வனே செய்து வருகின்றன. உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல நன்மை தரும் அறச்செயல்களைச் செய்து இந்நிறுவனங்கள் மக்களுக்கு உதவிகள் புரிகின்றன.
குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுக
Question 1.
நாய்க்குட்டி – குழிக்குள் – கத்தும் சத்தம் – முகிலன் – முதலுதவி – பால் – தூங்கியது – வாலாட்டியது.
Answer:
குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுதல் :
முகிலன் ஒருமுறை வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது நாய்க்குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தான். சாலையோரத்தில் இருந்த குழிக்குள் நாய்க்குட்டி ஒன்று விழுந்து கிடந்தது. மேலே ஏறுவதற்கு இயலாததால் கத்திக் கொண்டிருந்தது. முகிலன் அப்பள்ளத்தில் இறங்கி அந்நாய்க்குட்டியைத் தூக்கினான்.
அதற்கு முதலுதவி செய்தான். அதற்குக் கொஞ்சம் பால் ஊற்றினான். அந்நாய்க்குட்டி பாலைக் குடித்துவிட்டு சோர்வில் தூங்கியது. கொஞ்ச நேரத்தில் கண் விழித்துப் பார்த்தது. முகிலனைப் பார்த்து வாலாட்டியது. இக்கதையின் மூலம் உயிர்களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதை உணரலாம்.
அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக
1. கருணை
2. அச்சம்
3. ஆசை
அகராதி :
1. கருணை – இரக்கம்
2. அச்சம் – பயம்
3. ஆசை – விருப்பம்
கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக
Question 1.
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
Answer:
அகரவரிசை :
1. ஆசிரியர்
2. ஓணான்
3. கிளி
4. தேனி
5. தையல்
6. பழம்
7. பூனை
8. மனிதன்
9. மாணவன்
10. மான்
11. வௌவால்.
பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுக
Question 1.
கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.
Answer:
(i) கைகள் – சினைப்பெயர்
(ii) சான்றோர் – பொருட்பெயர்
Question 2.
அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.
Answer:
அடைதல் – தொழிற்பெயர்.
Question 3.
அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.
Answer:
அடங்கல் – தொழிற்பெயர்.
Question 4.
நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.
Answer:
நீதிநூல் – பொருட்பெயர்
Question 5.
மாலை முழுதும் விளையாட்டு.
Answer:
மாலை – காலப்பெயர்.
Question 6.
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.
Answer:
மேலோர் – பொருட்பெயர்.
பின்வரும் பாடலைப் படித்து, அடிக்கோடிட்ட சொல் எவ்வகைப் பெயர் என்பதை எழுதுக
1. விடியலில் துயில் எழுந்தேன். – விடியல் – காலப்பெயர்
2. இறைவனைக் கை தொழுதேன். – கை – சினைப்பெயர்
3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன் – மதுரை – இடப்பெயர்
4. புத்தகம் வாங்கி வந்தேன். – புத்தகம் – பொருட்பெயர்
5. கற்றலைத் தொடர்வோம் இனி. – கற்றல் – தொழிற்பெயர்
6. நன்மைகள் பெருகும் நனி. – நன்மைகள் – பண்புப்பெயர்
மொழியோடு விளையாடு
கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க.
Answer:
1. தீதும் நன்றும் பிறர்தர வாரா.
2. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
3. வாய்மையே வெல்லும்.
சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்
1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
4. அமுதசுரபியைப் பெற்றாள்.
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
Answer:
1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
2. அமுதசுரபியைப் பெற்றாள்.
3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக
1. அரம் – அறம்
அரம் – கூர்மையான கருவி – இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்.
அறம் – தர்மம் – பழந்தமிழர்கள் அறச்செயல்களில் சிறந்து விளங்கினர்.
2. மனம் – மணம்
மனம் – உள்ளம் – பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.
மணம் – வாசனை – மல்லிகை மணம் மிக்க மலர்.
இருபொருள் தருக
(எ.கா) ஆறு
ஆறு – நதி
ஆறு – எண்
1. திங்கள்
திங்கள் – கிழமை, மாதம், நிலவு
2. ஓடு
ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது
3. நகை
நகை – அணிகலன், புன்னகை
புதிர்ச் சொல் கண்டுபிடி
Question 1.
இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
Answer:
அறம்.
கட்டத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக மாலையில்
Answer:
1. மாலையில் விளையாடுவோம்.
2. பிறருக்கு உதவி புரிவோம்.
3. பெரியோரை வணங்குவோம்.
4. நூல்பல கற்போம்.
5. உடற்பயிற்சி செய்வோம்.
6. அதிகாலையில் எழுவோம்.
செயல் திட்டம்
Question 1.
நீங்கள் சேவை செய்ய விரும்பும் பணிகளைப் பட்டியலிடுக.
Answer:
நாங்கள் சேவை செய்ய விரும்பும் பணிகள் :
(i) இலவசமாகக் கல்வி கற்பித்தல்.
(ii) ஊனமுற்றோர்க்கு உதவுதல்.
(iii) விடுமுறை நாட்களில் வரும் திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவுதல்.
(iv) வாரத்திற்கு ஒருமுறை நான் வசிக்கும் தெரு மற்றும் நகரை நண்பர்களுடன் சேர்ந்து சுத்தப்படுத்துதல்.
(v) சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பயன்பாடுகளின் மூலம் வரும் தீமைகள் பற்றியும் மரங்களினால் வரும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
(vi) மக்களின் நலன்கள் மேம்படுவதற்கான செயல்களைச் செய்வேன்.
Question 2.
உயர்ந்த குறிக்கோளை அடைந்து வெற்றி பெற்ற சாதனையாளர்கள் தொகுப்பு ஒன்றைத் தயாரிக்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்
1. உணவை வீணாக்க மாட்டேன்.
2. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
3. பயணம் செய்யும் போது தேவைப்படுவோருக்கு எழுந்து இடம் தருவேன்.
4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவேன்.