Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.3 அகழாய்வுகள்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.3 அகழாய்வுகள்
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 3.3 அகழாய்வுகள்
கற்பவை கற்றபின்
Question 1.
இளைஞர்களிடையே பண்பாட்டினை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது குடும்பமா? சமூகமா? – என்னும் தலைப்பில் சொற்போர் நிகழ்த்துக.
Answer:
நடுவர் : அவையோருக்கு வணக்கம்!
இன்று நம் இலக்கிய மன்ற விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் !
இன்றைய சூழலில் நம் இளைய சமுதாயத்துக்கு பல வாய்ப்புகள், வசதிகள் உலகைப் பற்றி அறிய பல வாயில்கள் உள்ளன, எனினும் பண்பாட்டைக் கற்றுக் கொடுப்பது எது என ஆராயும் போது ஒரு சொற்போர் நடத்த வேண்டும். மாணவர்களின் சிந்தனைகளை அறிய வேண்டும் என்ற அவா எழுந்தது! அதனால் உருவானதே இத்தலைப்பு. இப்போது குடும்பமே என சொற்போர் நிகழ்த்த வருகிறார் அமுதா.
அமுதா : அனைவருக்கும் இனிய வணக்கம்….
ஐயா! “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பார்கள் “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்பார்கள். பெற்றோர்களே முதல் ஆசான் இவற்றையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கூற்றுகள் எல்லாம் அதனை உணர்த்துகிறது. ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வரும் குடும்பச் சூழ்நிலைதான் பண்பாட்டினை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது அல்லவா!
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற கவிஞனின் அடிகளைச் சான்றாக்கி நற்பண்பாட்டினை வளர்ப்பது குடும்பமே…. குடும்பமே… என்று கூறி என் சொற்போரை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்!
நடுவர் : ஆகா! அருமையான கருத்துகள் வாங்க வாணன்ஸ உங்கள் கருத்தை
வலியுறுத்துங்கள் பார்க்கலாம்.
வாணன் : சமூகமே
ஐயா! அமுதா எந்த நூற்றாண்டில் இருக்கிறாள் என்றே தெரியவில்லை! நீங்களே சொல்லுங்கள்! ஒரு குழந்தை 3வயது வரைதான் இப்போதெல்லாம் குடும்ப பராமரிப்பில் இருக்குது! மூணு வயதிலே சமூகத்துக்கு வந்துடுது ஐயா…..
தன் ஆசிரியரைப் பார்க்கிறது. தன் சக மாணவ, மாணவியரை பார்க்கிறார்கள். வண்டி ஓட்டும் ஓட்டுநர் முதல் ஆயா வரை அந்த குழந்தைக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
வளர்கிறான்… சமூகத்தின் பல செய்தி சாளரங்கள் திறக்கின்றன. தன்னையும் அறியாமல் அவற்றை ஆராய்கிறான்; நன்மை தீமை அறிகிறான்; அவன் மன வலிமையைப் பொறுத்து பண்பாட்டைக் காப்பவனாகவோ அல்லது மீறுபவனாகவோ மாறுகிறான். எனவே சமூகமே பெரும்பங்கு வகிக்கிறது. நன்றி வணக்கம்!
நடுவர் : இருவருடைய உரையைக் கேட்கும் போது, பண்பாட்டைக் கற்றுக் கொடுப்பது குடும்பமாக இருந்தாலும் அதனை வளர்த்தெடுக்கும் பங்கு சமூகத்தையே சார்ந்தது…. நன்றி வணக்கம்!
Question 2.
தொல்லியல் துறை சார்ந்த அலுவலர் ஒருவரிடம் நேர்காணல் நிகழ்த்துவதற்கான வினாப்பட்டியலை உருவாக்குக.
Asnwer:
ஐயா, வணக்கம்!
தமிழகத்தில் தொன்மையான பகுதிகள் என்று எப்படி வரையறைப்படுத்துவது?
கீழடி ஆய்வு எந்த வரலாற்றை அல்லது பின்புலத்தை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது
என்பது பற்றி விளக்கிச் சொல்லுங்களேன்.
ஐயா! இந்த பிராமி எழுத்துகள் என்பது எந்த மொழிக்குரியது?
ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் மட்டும் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றன. ஏன் அங்குமட்டும் இது போன்ற தடயங்கள் அதிகமாக உள்ளன என்பதற்குக் காரணங்கள் ஏதேனும் உண்டா ?
அறிவியல் மக்களுக்காகவே’ என்ற கொள்கையை சற்று விளக்கிச் சொல்லுங்களேன்.
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இறப்புத் தடயங்கள் ஏதேனும் கிடைத்துள்ளதா?
அகழாய்வு செய்யக் கூடிய இடங்களில் பெரும்பாலும் இறப்புப் பற்றிய தடயங்கள் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன என்று சொல்கிறார்கள் இதற்கான காரணத்தை விளக்கிச் சொல்ல முடியுமா?
கடலுக்குள் ஆய்வுகள் இதுவரை செய்யப்பட்டிருக்கின்றனவா? பூம்புகார் நகர கடல் பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வு போல் இன்றைய காலக்கட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டனவா? அப்படியானால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது என்னென்ன தடயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
இதுவரையிலும் தாங்கள் கூறிய அகழாய்வு பற்றிய செய்திகள் பயனுறு வகையில் அமைந்திருந்தன.
மிக்க நன்றி!
Question 3.
உங்கள் ஊருக்கு அருகில் உள்ள தொன்மையான இடத்தைப் பார்வையிட்டுக் குறிப்பு எழுதுக.
Asnwer:
எங்கள் ஊருக்கு அருகில் உள்ள தொன்மையான இடம் : வளவூர்
குறிப்புகள்:
எங்கள் ஊருக்கு அருகில் 150 ஆண்டுகளுக்கு முன் கடல் கோளால் கொள்ளப்பட்ட வளவூர் என்ற ஊரை அகழாய்வு செய்தனர். நான் அங்கு சென்று பார்த்த போது மிகவும் வியந்து போனேன்.
அக்கால மன்னன் கட்டிய அரண்மனைப் பகுதி தெரிந்தது. மக்கள் வழிபட்ட தெய்வத்திருமேனி வியப்பிற்குரியதாய் அரிதான உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது. அக்கால போர்வீரர்கள் பயன்படுத்திய ஆயுதம் சிதைந்துபோன நிலையில் கிடைத்தது மக்களின் உடை, வாழ்விடம், பயன்படுத்திய அணிமணிகள் ஆடம்பரமாய் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருந்தன. பிறநாடுகளுடன் கடல் வாணிகம் மேற்கொண்டதற்கான சான்றுகளும் இருந்தன. நம் முன்னோர்களின் கடந்த காலத்தை எண்ணி வியந்தேன்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று.
அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.
Answer:
இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
குறுவினா
Question 1.
தொல்லியல் ஆதாரங்கள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?
Answer:
- தொல்லியல் அகழாய்வு செய்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ஆகும்.
- அகழாய்வு வரலாறு முழுமைபெற உதவுகிறது. அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமின்றி நம் வரலாற்றையும் உணர்த்துகின்றன.
சிறுவினா
Question 1.
வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.
Answer:
அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழைய தலைமுறையைப் பற்றித் தெரிந்து என் செய்வது? செல்லிடப்பேசிக்குள்ளே உலகம் சுற்றும் வேளையில் அகழாய்வில் கிடைக்கும் செல்லாக்காசுகள் வந்தென்ன செய்ய முடியும்? மடிக்கணினி மலைக்கவைக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு மண் ஓடுகள் இறந்தோரைச் சுமந்த மண்தாழிகள் கண்டறிந்து என்ன சாதிக்க முடியும்? இவ்வாறு இருக்க, அகழாய்வு என்ன செய்ய இருக்கிறது?
அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டன.
நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன.
நெடுவினா
Question 1.
பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
மனிதன் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் பண்பாட்டு அளவில் சிறந்த வாழ்வை வெளிப்படுத்திய தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள தமிழகத்தின் தொன்மையான பகுதிகளைக் கொண்டும் மக்கள் பயன்படுத்திய பழமையான கருவிகளைக் கொண்டும் இசைக் கருவிகளைக் கொண்டும் அறிய முடிகிறது. அவற்றைப் பேணிக் காக்க வேண்டும். இது நம் கடமையாகும்.
பண்பாட்டுக் கூறு – ஏறுதழுவுதல்:
வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை மாடுகள். முல்லை மற்றும் மருத நிலங்களில் கால் கொண்டு தமிழர் தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பண்பாடாகி உள்ளது ஏறுதழுவுதல். இது தமிழர்களின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு. இளைஞர்களின் வீரத்தைப் பெருமிதப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வு. முன்னோர் வழிநின்று இளந்தலைமுறையினர் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று; காதலும் வீரமும் பழந்தமிழரின் பண்பாட்டுத் தடயங்கள். வீரமும் அன்பும் ஏறுதழுவுதலின் விளைநிலங்களாக விளங்குகிறது என்பதை வளரும் தலைமுறையினர்க்கு எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பு.
பண்பாட்டுக்கூறு – அகழாய்வு:
அகழாய்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ஆகும். ஆய்வு என்பது அறிவின் வெளிப்பாடு. நமது முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை வகைப்படுத்தி தொகுத்துப் பார்ப்பதற்குத் தொல்லியல் ஆய்வே பெருங்கல்வியாக அமைகின்றது. பண்பாட்டு எச்சங்களாகத் திகழும் இவ்வகையான ஆய்வுகளைக் கண்டு பயனடையலாம்.
பண்பாட்டுக்கூறு – திருவிழாக்கள்:
கி.பி. 2 ஆம் நூற்றாண்டோடு தொடர்புடைய புகார்நகரில் கொண்டாடப்பெற்ற இந்திரவிழா சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது. கோயில் விழாக்களில் பண்பாட்டுக் கூறுகளாக உள்ள ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதசுரம், பரதம், பொய்க்கால் குதிரை ஆட்டம் எனப்பல கலைகள் நடந்தேறுகின்றன. விழா நிகழ்ச்சியில் பட்டிமன்றம், தெருக்கூத்து நாடகங்களும் நடைபெறுகின்றன.
இத்தகைய பண்பாட்டுக் கூறுகளையும், கலைநிகழ்வுகளையும் பேணிப் பாதுகாத்து இளந்தலைமுறையினருக்கும் இனி வரும் தலைமுறையினருக்கும் காட்டுவது நம் கடமையாகும்.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக.
1. அறிவின் வெளிப்பாடாய்த் திகழ்வது
Answer:
ஆய்வு
2. பல்லாவரத்தில் ஆய்வு நடந்த ஆண்டு
Answer:
1863
நெடுவினா
Question 1.
‘அகழாய்வு’ குறித்து பாடப்பகுதி கருத்துகளைக் கூறுக
Answer:
முன்னுரை:
அகழாய்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ஆகும். ஆய்வு என்பது அறிவின் வெளிப்பாடு. நமது முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை வகைப்படுத்தி தொகுத்துப் பார்ப்பதற்குத் தொல்லியல் ஆய்வே பெருங்கல்வியாக அமைகின்றது. பண்பாட்டு எச்சங்களாகத் திகழும் இவ்வகையான ஆய்வுகளைக் கண்டு பயனடையலாம்.
கீழடி அகழாய்வு:
மதுரை நகருக்கு அருகே உள்ள கீழடி என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருள்கள், உலோகப் பொருள்கள், முத்துகள், கிளிஞ்சல் பொருள்கள், மான்கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு-கறுப்புப் பானைகள், சதுரங்கக் காய்கள், தானியங்களைச் சேகரிக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், எலும்பினால் ஆன கூர்முனைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், நீர் சேகரிக்கும் பெரிய மட்கலன்கள், சிறிய குடுவைகள், உறைக்கிணறுகள், சுடுமண் கூரை ஓடுகள் போன்ற பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன. மூன்று வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இவற்றுள் தொன்மையானவை சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன.
இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட பெரும்பான்மையான இடங்கள், இறப்புத் தொடர்பான தடயங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. ஆனால், கீழடியில் கண்டறியப்பட்டுள்ள முழுமையான வாழ்விடப்பகுதியும், செங்கல் கட்டுமானங்களும், இதரப் பொருள்களும் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் கண்முன் காட்டும் சாட்சிகளாய் அமைந்துள்ளன.
பல்லாவரம் அகழாய்வு:
150 ஆண்டுகளுக்கு முன்னால் 1863ஆம் ஆண்டு இராபர்ட் புரூஸ்புட் என்னும் தொல்லியல் அறிஞர் சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார். இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம். இந்தக் கல்லாயுதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, ரோமானியர்களின் பழங்காசுகளைக் கோவையில் கண்டெடுத்தோம்.
அரிக்கமேடு:
அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால், ரோமானியர்களுக்கும், நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.
ஆதிச்சநல்லூர்:
1914ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உள்ளங்கையில் உலகம் இருக்கிறது. மடிக்கணினி மலைக்க வைக்கிறது. நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன.
அகழாய்வின் பயனும் முடிவும்:
அகழாய்வில் கிடைத்த ஆவணங்களோ அடுத்த தலைமுறைக்கு நம் பண்பாட்டின் மேன்மையைப் பறைசாற்றும். எனவே, அகழாய்வு என்பது நமக்கு மிகமிகத் தேவையான செயல்பாடு. அகழாய்வு தரும் சான்றுகளின் மூலம் நமது வளமான வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்துகொண்டு வலிமையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இயற்கையோடு இணைந்த பண்பாட்டு வாழ்க்கை நம்முடையது. மக்கள் அறிவியல் என்கிற மகத்தான சிந்தனையைப் புரிந்துகொள்வதற்கும் நமது பண்பாட்டின் மேன்மைகளை இன்றைய தலைமுறை எடுத்துக்கொண்டு சிறப்பாக வாழ்வதற்கும் அகழாய்வு துணைநிற்கின்றது.