Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.2 குடும்ப விளக்கு
கற்பவை கற்றபின்
கற்பவை கற்றபின்
Question 1.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பாரதி
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா…. – கவிமணி
பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது – பாவேந்தர்
இவை போன்ற பெண்மையைப் போற்றும் கவிதை அடிகளைத் திரட்டுக.
Question 2.
ஆணுக்கும் சமையல் செய்யத் தெரிந்திருப்பதன் பயன் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடி அதன் கருத்துகளைத் தொகுக்க.
Answer:
மாணவர்களே!
நம் பாடப்பகுதியான குடும்ப விளக்கில், தலைவி பேசும் பொழுது, ஆண்களும் சமையல் பணியை ஏற்றுக் கொள்ளும் நாள் நன்னாள் என்றாள் அல்லவா…
அதன் அடிப்படையில் ஆண்களுக்குச் சமையல் செய்யத் தெரிந்தால் என்னென்ன பயன் என்பது குறித்துக் கலந்துரையாடுங்கள். நாங்கள் கேட்டு மகிழ்கிறோம்.
கலந்துரையாடுபவர்கள்
(நாதன், அமுதா, இனியா, முகிலன்)
அமுதா : நாதா; இப்போது தான் பள்ளிக்கு வருகிறாயா? ஏன் தாமதம்…
நாதன் : அவசர வேலையின் நிமித்தமாக என் அம்மா ஊருக்குச் சென்று விட்டார்கள். கடையில் உணவு வாங்கி வரத் தாமதமாகி விட்டது.
இனியா : என்ன? உன் அம்மா ஊருக்குச் சென்று விட்டார்களா? கடையிலா உணவு வாங்கினாய்.
நாதன் : ஆமாம் இனியா! நான், என் தந்தை, என் அண்ணன் மூவருமே ஆண்கள் அல்லவா! அதனால் வீட்டில் சமையல் இல்லை.
முகிலன் : என்னடா இது! மூவருக்கும் ஒன்றுமே தெரியாதா?
நாதன் : தெரியாது முகிலா; தேநீர் முதல் உணவு வரை கடையில் தான்!
முகிலன் : இதோ! பார் என் அம்மாவுக்கும் இன்று உடல் நிலை சரியில்லை. காலையிலே மருத்துவமனை சென்று விட்டார். நானும் என் தந்தையும் தான் சமையல் செய்தோம்.
இனியா : அப்படியா! முகிலா
முகிலன் : ஆமாம் இனியா! வேலை செய்தே என் அம்மா மிகவும் சோர்ந்து உடல் நலம் குன்றிவிட்டார்கள். அதனால் என் தந்தை, முகிலா! நீயும் நானும் அம்மாவுக்கு சற்று ஓய்வு கொடுப்போம். அவர்கள் நிதானமாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வரட்டும் என்றார்.
அமுதா : எப்படி சமைத்தீர்கள்?
முகிலன் : காலையிலே அப்பா கடைக்குச் சென்று கீரை வாங்கி வந்தார். அவர் சோறு சமைக்கும் முன் நான் கீரையைச் சுத்தம் செய்து, அதனைச் சமைப்பதற்குத் தேவையான வெங்காயம் போன்றவற்றை உரித்துக் கொடுத்து நான் பள்ளிக்குப் புறப்படச் சென்றேன். அப்பா அம்மாவைவிட வேகமாகச் சமைத்து விட்டார். சத்துள்ள உணவும் கிடைத்தது. கடைக்குச் செல்லும் அலைச்சல், பணம், நேரம் எல்லாம் மிச்சம்.
நாதன் : நானும் ஒரு காணொளியில் பார்த்தேன். சமையல் தெரியும் ஆண்களுக்குக்கலையுணர்வும், தன்னம்பிக்கையும் அதிகம் என்றும்; ஆண்கள் சமையல் கற்றுக் கொள்வதால் வீட்டில் சமத்துவம் வளரும்; எல்லோருக்கும் ஒருவர் மேல் ஒருவர்க்கு அக்கறை கூடும்; வீணான செலவுகள் தவிர்க்கப்படும்; கடையில் உணவை வாங்கி உண்பதால் ஏற்படும் உடல் நலக் கேடுகளைத் தவிர்க்கலாம் என்றும் அந்தக் காணொளி விளக்கியது. முகிலா…..
முகிலன் : நாதன் ; இனி நம் வீட்டில் நம் அன்னை உடல் நலக் குறைவுற்றாலோ, ஊருக்குச் சென்றாலோ நம் தேவைக்கு நம் தந்தை, நம் சகோதரர்கள் இணைந்து சமைக்க முயற்சிப்போம்…..
அமுதா, : நல்ல முடிவு நண்பர்களே வீடும், நாடும் நலம் பெற சமையல் உட்பட எல்லாப்
இனியா… பணிகளையும் இரு பாலரும் இணைந்தே செய்வோம்…
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
க) அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
உ) அ – 2, ஆ – 3, இ – 1, ஈ – 4
ங) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
ச) அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 3
Answer:
க) அ- 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
குறுவினா
Question 1.
தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?
Answer:
- குடும்ப விளக்கின் தலைவியின் பேச்சில்,
- பெண்ணுக்கு விடுதலை வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
- பெண் ஒளிர வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
நாட்டின்வழக்கத்தை மாற்ற வேண்டுமெனில் கல்விவேண்டும் என்று “பெண்கல்விவேண்டும்” என்பதையே பாடுபொருளாகக் கொண்டு தலைவி பேசி, தன் கருத்தை வெளிப்படுத்துகிறாள்.
சிறுவினா
Question 1.
சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்.
அ) இன்பம் சமைப்பவர் யார்?
ஆ) பாவேந்தர் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
Answer:
அ) இன்பம் சமைப்பவர்
உணவைச் சமைப்பவரே, அதனை அன்புடன் படைப்பது மூலம் (பரிமாறுவது மூலம்)
இன்பத்தையும் சமைப்பவர் ஆவார்.
ஆ) சமைப்பது தாழ்வா : உணவைச் சமைத்துத் தருவது உயிரை உருவாக்குவது போன்றதாகும். எனவே பாவேந்தர் கூற்றுப்படி சமையல் தாழ்வாகாது.
நெடுவினா
Question 1.
குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
Answer:
முன்னுரை:
பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை வெளிப்படுத்தும் போது, பெண்கல்வி குறித்த கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளும், இன்றைய சூழலையும் பார்ப்போம்.
தலைவியின் பேச்சு:
கல்வி இல்லாத பெண்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள்; அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த புதல்வர்கள் உருவாவதில்லை. கல்வியறிவு பெற்ற பெண்கள், பண்பட்ட நன்செய் நிலம் போன்றவர்கள். அவர்கள் மூலமே சிறந்த அறிவார்ந்த மக்கள் உருவாகின்றனர்.
பெண்கல்வி இல்லாததினால், இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது.
கல்வியறிவு இல்லாத பெண், மின்னல் போல் ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவள் வாழ்வு ஒளிர்வதில்லை .
“கல்வி இல்லா மின்னாள்
வாழ்வில் என்றும் மின்னாள்”
சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.
இன்றைய சூழல் :
கல்வி கற்ற பெண் குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கட்பேறு இல்லந்தோறும் காணப்படுகிறது.
துறைதோறும்:
வானூர்தியைச் செலுத்துதல் விண்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப் பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை அளத்தல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள், செயலாற்றும் திறன் உடையவளாய் இருக்கிறாள் என்பதை மறுக்க இயலாது.
“வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுது மளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே” ஆகிவிட்டது.
சமையல்பணி :
சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற நிலை மாறிவருகிறது. ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும் காலம் வந்து கொண்டிருக்கிறது எனில் மிகையாகாது.
குடும்ப விளக்கு தலைவிபேசும், கால கட்டத்தை விட ‘பெண்கல்வி’ இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது.
முடிவுரை:
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
என்ற பாரதியின் கனவு வரிகள் நனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
உணவினை ஆக்கல் மக்கட்கு ……….. அன்றோ
அ) உயிர் ஆக்கல்
ஆ) உயிர் அழித்தல்
இ) உணவாக்கல்
ஈ) உணவழித்தல்
Answer:
அ) உயிர் ஆக்கல்
Question 2.
கல்வியை உடைய பெண்கள் …………… ஆவார்.
அ) உவர் நிலம்
ஆ) பண்படாத நிலம்
இ) திருந்திய கழனி
ஈ) கிணற்றுத் தவளை
Answer:
இ) திருந்திய கழனி
Question 3.
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உருவகம்
ஈ) உவமைத்தொகை
Answer:
ஈ) உவமைத்தொகை
Question 4.
உணவினை ஆக்கல் மக்கட்கு உயிர் ஆக்கல் அன்றோ – இவ்வடியில் உள்ள நயம் யாது?
அ) அடி மோனை
1) அ – சரி
ஆ) அடி எதுகை
2) இ, ஈ – சரி
இ) சீர் இயைபு
3) நான்கும் சரி
ஈ) அடி இயைபு
4) நான்கும் தவறு
Answer:
1) அ – சரி
Question 5.
பொருத்துக:
அ) தணல் – 1 சமைக்கும் கலன்
ஆ) தாழி – 2 செய்க
இ) இயற்றுக – 3 சொல்லல்
ஈ) நவிலல் – 4. நெருப்பு
Answer:
அ4 ஆ1, இ2, ஈ3
Question 6.
“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
அ) வில்வாள்
ஆ) பணமும் படையும்
இ) மலரும்
ஈ) ஆண்க ளும்
Answer:
வில்வாள்
Question 7.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?
அ) குடும்ப விளக்கு
ஆ) இருண்ட வீடு
இ) அழகின் சிரிப்பு
ஈ) பிசிராந்தையார் நாடகம்
Answer:
ஈ) பிசிராந்தையார் நாடகம்
Question 8.
குடும்ப உறவுகள் ………… என்னும் நூலால் பிணைந்துள்ளது.
அ) கோபம்
ஆ) அன்பு
இ) அடக்கம்
ஈ) கவலை
Answer:
ஆ) அன்பு
Question 9.
குடும்ப விளக்கு ………….. பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) 4
ஆ) 6
இ) 5
ஈ) 7
Answer:
இ) 5
Question 10.
பாரதிதாசன் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி.
அ) பாண்டியன் பரிசு
ஆ) பொன்னியின் செல்வன்
இ) அழகின் சிரிப்பு
ஈ) இருண்ட வீடு
Answer:
ஆ) பொன்னியின் செல்வன்
குறுவினா
Question 1.
குடும்ப விளக்கின் பாடுபொருளாக அமைவன யாவை?
Answer:
- குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது.
- கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது.
Question 2.
பாரதிதாசனின் படைப்புகள் யாவை?
Answer:
- பாண்டியன் பரிசு
- அழகின் சிரிப்பு
- இருண்ட வீடு
- குடும்ப விளக்கு
Question 3.
எச்செயல்கள் இருபாலர்க்கும் பொதுவானது என்கிறது குடும்ப விளக்கு.
Answer:
வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்கிறது குடும்ப விளக்கு.
Question 4.
தலைவி எவற்றைப் பொருத்தமற்றவை என்கிறாள்?
Answer:
சமைப்பது, வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வது போன்றவை பெண்களுக்கே உரியவை என்று கூறுவது பொருத்தமற்றது என்கிறாள் தலைவி.
சிறுவினா
Question 1.
பாரதிதாசன் குறிப்பு வரைக.
Answer:
- பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
- இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
- பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழயக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.
- இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
- இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
Question 2.
குடும்ப விளக்கு நூலின் ஐந்து பகுதிகள் யாவை?
Answer:
- ஒருநாள் நிகழ்ச்சி
- விருந்தோம்பல்
- திருமணம்
- மக்கட்பேறு
- முதியோர் காதல்
முதலிய ஐந்து பகுதிகளைக் கொண்டது குடும்ப விளக்கு.