TN 9 Tamil

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.1 சிற்பக்கலை

கற்பவை கற்றபின்

 

Question 1.
உங்கள் பகுதியில் உள்ள பழமையான சிற்பம் ஒன்றைப் பற்றிய செய்திக்குறிப்பை உருவாக்குக.
Answer:
திருநெல்வேலியில் இருந்து 12 கி.மீ தொலைவில், திருச்செந்தூர் சாலையில் 16 ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் தனிச்சிறப்பு அங்குள்ள சிற்பங்களே. இரு மண்டபங்களிலும் ஆறு அடிக்கு குறையாமல், 30க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிற்பங்கள் அனைத்தும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தூண்களில்தான் உள்ளன. இங்குள்ள பீமன், வியாக்ரபாலகன் சிற்பம் பற்றிய ஒரு செய்தி உண்டு.

பீமனும், வியாக்ரபாலகனும் சண்டையிடுகின்றனர். தர்மராஜா நடுநிலை வகிப்பதாகவும், நடுவராக இருந்த தர்மராஜா வியாக்ரபாலகன் வென்றதாகவும் தீர்ப்பளித்தாராம்.

 

இந்தச் செய்தியைக் குறிக்கும் வகையில், அதிசயச் சிற்பத் தொகுப்பாக அமைந்துள்ளது. பீமனும், வியாக்ரபாலகனும், தர்மராஜாவும் இருக்கும் சிற்பம் உள்ளது.

இச்சிற்பத்தில், பீமன் வீரமும், திமிரும் வெளிப்படுத்தும் முகபாவத்துடனும், வியாக்ரபாலகன் பராக்கிரமத்துடனும், தர்மராஜா அமைதியான முகபாவத்துடனும் இருப்பதாக சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் தலைசிறந்த கலைப்படைப்புகளாகவும், உணர்ச்சி ததும்பும் உயிரோவியங்களாகவும் காட்சியளிக்கின்றன.

இக்கோயிலின், இராஜகோபுரமும் கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும், 16-ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலைப் பணிக்குச் சான்றாக உள்ளது.

Question 2.
ஓவியர்/சிற்பி/இசைக் கலைஞர் ஒருவரைச் சந்தித்து அவர் கூறும் கலை நுட்பங்களையும், அனுபவங்களையும் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:

சிற்பியின் கலை நுட்பங்களும், அனுபவங்களும்

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிற்பி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சிற்பங்களை (செதுக்குதல், வடித்தல், உருவாக்கல்] ஒவ்வொரு பொருளைக் கொண்டு செய்யும் போது மேற்கூறிய மூன்று பெயர்களாலும் அழைக்கப்படுமாம். உருவாக்கும் நுட்பங்களைக் கூறமுடியுமா என்று வினவிய போது, பல வியப்புக்குரிய செய்திகளைக் கூறினார். இதோ அவர் கூறிய கருத்துகள்.
சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப்பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருள்களில் இருந்து உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது.

 

கற்கள், உலோகம் (செம்பு) மரம், மண், தந்தம் போன்ற பொருட்கள் சிற்பங்கள் உருவாக்கப் பயன்படுபவையாம்.

கல், மரம் போன்றவற்றில் சிற்பம் உருவாக்கும் போது, சிற்பமாக உருவாக்க வேண்டியவற்றைச் செதுக்குவார்களாம்.

உலோகம் போன்ற பொருள்களைக் கொண்டு செய்யும் போது உருக்கி வார்ப்பார்களாம்,

ஒட்டுதல் :

அச்சுகளில் அழுத்துதல் போன்ற உத்திகளையும் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவோம் என்றார். மண்ணால் செய்யும் போது உருவத்தைச் செய்தபின் சூளையில் சுடுவதாகக் குறிப்பிட்டார்.

சிற்பங்கள் மனித நாகரிகத்தையும், அதன் வளர்ச்சிக் கூறுகளையும் வெளிப்படுத்தும் சான்றுகள் என்று பெருமிதப்பட்டார்.

மேலும், கல், உலோகம், செங்கல், மரம், சுதை (சுண்ணாம்பு) மெழுகு, தந்தம் வண்ணம். கண்ட சருக்கரையும் சிற்பம் வடிக்க ஏற்றவையாம்.

ஒரு உருவத்தின் முன்புறம், பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும். ஒரு புறத்தை மட்டும் காட்டும் சிற்பங்களைப் புடைப்புச் சிற்பம் என்றும் கூறுவார்கள் என்று தெளிவுபடுத்தினார். சிற்பங்கள் சமய வெளிப்பாடாகவும் அரசாட்சி பற்றிய வெளிப்பாடாகவுமே இருந்தன என்றார்.

முன்பெல்லாம் சிற்பங்களை உருவாக்கிய மேதைகள் சிற்பக்கலை மூலம் உருவங்களுக்கு உயிரூட்டினர். இன்றோ பண்டைய மரபு முறைகள் முற்றிலும் மாறுபட்டு வருவதோடு உடலமைப்பை வெளிப்படுத்துவதாக மாறி விட்டதே என்று வருந்தினார்.
நானும் விடை பெற்றுக்கொண்டு வந்தேன்.

 

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ……………………..
அ) மாமல்லபுரம்
ஆ) பிள்ளையார் பட்டி
இ) திரிபுவனவீரேசுவரம்
ஈ) தாடிக்கொம்பு
Answer:
அ) மாமல்லபுரம்

Question 2.
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ………..
அ) விலங்கு உருவங்கள்
ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
இ) தெய்வ உருவங்கள்
ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
Answer:
ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

 

குறுவினா

Question 1.
செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • செப்புத் திருமேனிகள் சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகும்.
  • சோழர் காலத்தில்தான் மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவமைக்கப்பட்டன.
  • கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு வடிவமைக்கப் பட்டன.
  • சோழர் காலம் “செப்புத் திருமேனிகளின் பொற்காலம்” என்று அழைக்கப்படும் அளவிற்கு அவை அழகுற அமைந்துள்ளன.

Question 2.
நடுகல் என்றால் என்ன?
Answer:

  • நடுகல் பற்றியக் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
  • போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.
  • அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப் பெறும். அவரது வீரத்தின் சிறப்பும் கூறப்பெறும்.
  • தமிழரின் தொடக்ககாலச் சிற்பக் கலைக்குச் சான்றாக இதனைக் குறிப்பிடுவர்.

 

Question 3.
இசைத்தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
Answer:
பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.

சிறுவினா

Question 1.
முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
முழு உருவச் சிற்பம்:
உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்து இருக்கும்.

புடைப்புச் சிற்பம்:
புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்.

 

Question 2.
நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
Answer:

  • நாயக்கர் காலச் சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படும்.
  • நாயக்கர் காலச் சிற்பங்களை, கலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு என்று கூறலாம்.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலை நயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன.

நெடுவினா

Question 1.
தமிழ்நாட்டு சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.
Answer:
முன்னுரை:
கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன்; சிற்பம் என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான். உணர்வுகளையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்றின் வாயில்களாகவும், கலைநயம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன.

 

சிற்பங்களின் கலை நயம்:
“கற்கவிஞர்கள்” என்று சிறப்பிக்கப்படும் சிற்பிகள் வடித்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலைநயம் மிக்கவையாய் மிளிர்கின்றன.
சிற்பங்களை கோவில்களின் கட்டடங்கள், கற்றூண்கள், சுற்றுச்சுவர்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் கலைநயம் மிளிர செதுக்கினர்.

புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலையில் உள்ள சிற்பம் நடனக்கலையின் முத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு கலை நயத்துக்கோர் சான்றாகும். கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள் சிற்பக்கலை நுட்பத்திற்கு தனி சான்றாய்த் திகழ்கிறது.

கோவில் கோபுரங்களில் சுதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. அவையும் சிற்பக் கலைநுட்பம் வாய்ந்தவை. உருவங்கள் விழியோட்டம், புருவ நெளிவு. நக அமைப்பு என மிக மிக நுட்பமாக கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

 

கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் கலைநயம் வாய்ந்தவை.

சிற்பங்கள் வரலாற்றுப் பதிவுகள்:

சிற்பக் கலையைப் பற்றிக் கூற முற்படுகின்ற பொழுது,

  • பல்லவர் காலச் சிற்பங்கள்
  • பாண்டியர் காலச் சிற்பங்கள்
  • சோழர் காலச் சிற்பங்கள்
  • விஜய நகர மன்னர் காலச் சிற்பங்கள்
  • நாயக்கர் காலச் சிற்பங்கள்

என்றே வகைப்படுத்துகிறோம். எனவே சிற்பக்கலை வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கிறது என்பதை மறுக்க இயலாது.

மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் மூ லம் பல்லவர் கால வரலாற்றை உணரலாம்.

திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.

கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம், தஞ்சை பெருவுடையார் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம், இராசஇராசசோழன், குலோத்துங்க சோழன், இராசேந்திர சோழன், இரண்டாம் இராசராசன் போன்ற மன்னர்களின் வரலாறுகளையும், அவர்கள் கலை வளர்த்தப் பாங்கினையும் அறியலாம்.

 

விஜயநகர மன்னர்கள் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்தது, அவற்றில் சுதைகளாலான சிற்பங்களை அமைக்கச் செய்தனர்.

சோழர் காலத்தை செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று சிறப்பிக்கின்றனர்.
நாயக்க மன்னர்களின் காலத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிவிக்கிறது இக்கலை.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்ணப்பர், சந்திரமதி, அரிச்சந்திரன் வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.

முடிவுரை:
சிற்பங்கள் என்பன தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும், ஏனைய உருவங்களைக் கண்டு களிப்பதற்கும் மட்டுமல்ல, அவை கலைநயத்தின் சான்றாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும், அறிவின் முதிர்ச்சிக்கு ஓர் அடையாளமாகவும் இருப்பதால் சிற்பக்கலையைப் போற்றி பேணுவது நம் கடமையாகும்.

 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடப்படுவது எது …………
அ) மைல்கல்
ஆ) சுடுகல்
இ) நடுகல்
ஈ) கருங்கல்
Answer:
இ) நடுகல்

Question 2.
சிற்பிகள் …………. என சிறப்பிக்கப்பட்டனர்.
அ) கல்லோவியர்கள்
ஆ) கற்கவிஞர்கள்
இ) கற்சொல்லோவியர்கள்
ஈ) சுவரோவியர்கள்
Answer:
ஆ) கற்கவிஞர்கள்

Question 3.
கழுகுமலை கோவில் சிற்பங்கள் ………. காலத்தவையாகும்.
அ) நாயக்கர்
ஆ) பல்ல வர்
இ) பாண்டியர்
ஈ) சோழர்
Answer:
இ) பாண்டியர்

 

Question 4.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட நூல்…………
அ) சிற்பக்கலை
ஆ) தமிழக சிற்பங்கள்
இ) சிற்பமும் சிந்தனையும்
ஈ) சிற்பச்செந்நூல்
Answer:
ஈ) சிற்பச்செந்நூல்

Question 5.
உலோகப்படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்
அ) சுவாமிமலை
ஆ) கும்பகோணம்
இ) மதுரை
i) அ-சரி, ஆ, இ – தவறு
ii) முதல் இரண்டு சரி
iii) மூன்றும் சரி
iv) மூன்றும் தவறு
Answer:
iii) மூன்றும் சரி

 

Question 6.
தமிழகச் சிற்பக்கலையில் இடம் பெறும் கலைக் கூறுகள்
அ) யோகக்கலை
ஆ) நாட்டியக்கலை
இ) இசைக்கலை
ஈ) பேச்சுக்கலை
i) அ, ஆ-சரி
ii) அ,ஆ – தவறு
iii) நான்கும் சரி
iv) நான்கும் தவறு
Answer:
யோகக்கலை, நாட்டியக்கலை

Question 7.
கொடும்பாளுர் மூவர் கோவில் கட்டிய மன்னன்
அ) முதலாம் பராந்தகச் சோழன்
ஆ) இரண்டாம் பராந்தகச் சோழன்
இ) முதலாம் குலோத்துங்கச் சோழன்
ஈ) இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
Answer:
ஆ) இரண்டாம் பராந்தகச் சோழன்.

Question 8.
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) புறப்பொருள் வெண்பாமாலை
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
அ) தொல்காப்பியம்

 

Question 9.
மாளிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்ததைக் குறிப்பிடும் காப்பியம் எது?
அ) சீவகசிந்தாமணி
ஆ) மணிமேகலை
இ) நளவெண்பா
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஆ) மணிமேகலை

Question 10.
நாயக்கர்கால சிற்பக்கலை நுட்பத்துக்குச் சான்றாகும் கோவில் எது?
அ) மூதூர் பெருமாள் கோவில்
ஆ) பேரூர் சிவன் கோவில்
இ) காஞ்சி கயிலாயநாதர் கோவில்
ஈ) சீனிவாசநல்லூர் இரங்கநாதர் கோவில்
Answer:
ஆ) பேரூர் சிவன்கோவில்

Question 11.
திருவரங்கக்கோவில் யாருடைய காலத்துக் கட்டடக் கலைக்குச் சான்றாகிறது.
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
ஆ) சோழர்

 

குறுவினா

Question 1.
சிற்பங்களை உருவாக்க எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.
Answer:
கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை (சுண்ணாம்பு) தந்தம், கண்ட சருகக்கரை, மெழுகு போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்று திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.

Question 2.
சிற்பங்கள் அமைக்கப்படும் நான்கு நிலைகள் யாவை?
Answer:

  • தெய்வ உருவங்கள்
  • இயற்கை உருவங்கள்
  • கற்பனை உருவங்கள்
  • முழுவடிவ (பிரதிமை) உருவங்கள் என நான்கு நிலைகளில் கல்லினாலும், உலோகத்தினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன.

Question 3.
பாண்டியர் கால சிற்பவேலைப்பாடுகளுக்கு சான்றாகும் இடங்கள் யாவை?
Answer:
பாண்டியர் காலத்தில் குகைக் கோயில்களில் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அவற்றுக்கு சான்றாக. திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களைக் கூறலாம்.

Question 4.
சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
Answer:

  • இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
  • முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என்பனவாகும்.

 

Question 5.
புடைப்புச் சிற்பங்களை எங்கு காணலாம்?
Answer:
அரண்மனைகள், கோவில்கள்.

Question 6.
கற்கவிஞர்கள் – குறிப்பு வரைக.
Answer:
சிற்ப இலக்கண மரபைப் பின்பற்றிக் கலை நயத்துடனும் மிகுந்த தேர்ச்சியுடனும் சிற்பிகள் சிற்பங்களைவடிவமைக்கின்றனர். அதனால், அவர்களைக் “கற்கவிஞர்கள்” என்று சிறப்பிக்கின்றனர்.

Question 7.
சோழர் காலச் சிற்பங்களின் கருவூலங்களாகத் திகழ்பைவை யாவை?
Answer:

  • முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரியகோவில்
  • முதலாம் இராசேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம்
    இரண்டாம் இராசராசன் எழுப்பிய தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
  • இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அமைத்த திரிபுவன வீரேசுவரம் கோவில்

 

Question 8.
சோழர் காலச் சிற்பத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குபவை?
Answer:
தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படுகின்ற பதினான்கு அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் வியப்பூட்டும் வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் சோழர்காலச் சிற்பத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.

Question 9.
நாயக்கர் காலச் சிற்பங்கள் காணப்படும் இடங்களுக்குச் சான்று தருக.
Answer:

  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
  • இராமேசுவரம் பெருங்கோவில்
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

Question 10.
நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று குறிப்பிடப்படுவது எது?
Answer:
கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள்

 

சிறுவினா

Question 1.
பௌத்த – சமண சிற்பங்கள் – குறிப்பு வரைக.
Answer:
பௌத்த சமயத்தினர் புத்தரின் உருவத்தை அமர்ந்த, நின்ற, படுத்த நிலைகளில் சிற்பங்களாக படைத்து வழிபட்டனர்.

சமண மதத்தினர் அருகக் கடவுளின் உருவத்தையும், இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களையும் சிற்பங்களாக்கியுள்ளனர். இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

Question 2.
இன்றைய சிற்பக்கலை குறித்து எழுதுக?
Answer:

  • இன்று சுதை சிற்பங்களும், கல்சிற்பங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • செங்கல், பைஞ்சுதை (சிமெண்ட்) ஆகியவற்றைக் கொண்டும் கலைநயமிக்க சிற்பங்களை வடிக்கின்றனர்.
  • வெண்கலம் மற்றும் செயற்கை இழைகள் மூலமாகவும் உருவங்கள் உருவாக்கப் படுகின்றன.
  • இன்றைய சிற்பக்கலை கோவில்களைக் கடந்து, பலதுறைகளில் தன் இடத்தை நிறைவு செய்கிறது.

 

Question 3.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் பற்றி எழுதுக.
Answer:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன் குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் ஆடை, ஆபரணங்கள் கலைநயத்துடன் காணப்படுகின்றன. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலையும் அமைந்துள்ளது.

Question 4.
சிற்பக்கலை வளர்ச்சியில் தமிழக அரசின் பங்கினை எடுத்தியம்புக.
Answer:
தமிழக அரசு, சிற்பக் கலைஞர்களைப் பரிசளித்துப் பாராட்டிச் சிற்பக்கலையை வளர்த்து

வருகிறது. மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது. அக்கல்லூரியில் இருந்து ஆண்டுதோறும் சிற்பக் கலைஞர்கள் பலர் உருவாகின்றனர்.

சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன. சென்னயிைலும் கும்பகோணத்திலும் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சிற்பக்கலையைப் பயிலலாம்.

 

இக்கலைத்துறையில் மிகுதியான வேலைவாய்ப்புகள் உள்ளன. சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் “சிற்பச்செந்நூல்” என்ற நூலை வெளியிட்டுள்ளது.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *