Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை
கற்பவை கற்றபின்
Question 1.
“பிறருக்கு உதவி செய்வதற்கு மொழி தேவையில்லை” என்ற கருத்தை அடிப்படையாக் கொண்டு வகுப்பறை மேடையில் நடித்துக் காட்டுக.
Answer:
மாணவர்களே,
உங்கள் வகுப்பறை மேடையில் (mime show) மௌன நாடகமாக பின்வருவதை நடித்துக்காட்டுங்கள்.
நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது மிதிவண்டியில் வரும் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு, சாலையில் விழுகிறார் உடனடியாக நீங்கள் அவருக்கு முதலுதவி செய்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி செய்து, வீட்டு முகவரியை விசாரித்து பத்திரமாய் அழைத்து செல்வது என மேற்கூறிய காட்சியை நடித்து காட்டுங்கள்.
மனிதநேயம், அன்பு, இரக்கம், உதவி இவற்றை வெளிப்படுத்த மொழி தேவையில்லை என்பதை உணர்த்துங்கள்.
Question 2.
கதையைத் தொடர்ந்து எழுதித் தலைப்பிடுக.
Answer:
சுண்டெலியின் அறிவு சுண்டெலிகளுக்குப் பூனையால் மிகவும் துன்பமான நேரம். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று சுண்டெலிகளைப் பிடித்துத் தின்றது பூனை. சுண்டெலிகள் ஒன்று சேர்ந்து என்ன செய்வது என்று ஆலோசித்தன. மேலும் மேலும் ஆலோசித்தன. ஆனால் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.
பிறகு ஒரு சின்ன சுண்டெலி சொன்னது, பூனைக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன். நான் செய்கிறேன் என்றது. சரி முயற்சி செய்து பார் என்று மற்ற சுண்டெலிகள் கூறின.
அன்று பூனை தனக்குத் தேவையான சுண்டெலிகளைப் பிடித்துத் தின்று ஓய்வாக படுத்திருந்தது. சுண்டெலி அருகில் சென்றது. பூனை ஐயா! தங்களுக்கு என் வணக்கம். எங்கள் பூனைகளின் சார்பாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். அப்படியா என்ன… விஷயம் சொல்லு என்றது பூனை.
ஐயா! உங்கள் பசியைப் போக்க நீங்கள் அலைந்து திரிந்து எங்களைத் தேடி வந்து சாப்பிட வேண்டாம் ஐயா!
நாங்களே தேடி வந்து உங்களுக்குத் தேவையானபோது உணவாகி விடலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஐயா! ஓ அப்படியா ரொம்ப மகிழ்ச்சி. சரி எனக்கு எப்போது பசி என்று நீங்கள் எப்படி தெரிந்து கொள்வீர்கள்?
அதற்கு ஒரு யோசனை இருக்குதய்யா…. ம்ம்… சொல்லு உங்கள் நான்கு கால்களில் ஒரு காலில் மணி ஒன்றை கட்டி விடுகிறேன் ஐயா.
நீங்கள் பசிக்கும் போது… உங்கள் காலை தரையில் உதையுங்கள் மணியோசை கேட்டவுடன் நாங்கள் ஓடோடி வருகிறோம் ஐயா… என்றது.
பூனை யோசித்தது… சரி… நானும் வளை தேடி ஓடி வரவேண்டியிருக்காது சாப்பிட்டோமா… படுத்தோமான்னு நிம்மதியா இருப்பேன்… என்றது.
பூனையைத் தன் அறிவாற்றலால் வென்ற சுண்டெலி, பூனையின் காலில் மணியைக் கட்டிவிட்டு ஓடி வந்து விட்டது.
பயந்து போய் நின்ற தன் சக சுண்டெலிகளிடம் நான் மணியைக் கட்டிவிட்டேன். இனி மகிழ்ச்சியாக அவரவர் வளைகளிலும். பொந்துகளிலும் சுதந்திரமாக வாழலாம் என்றது.
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
Question 1.
‘தாய்மைக்கு வறட்சி இல்லை’, என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.
Answer:
முன்னுரை:
எது வறண்டு போனாலும் உலகில் தாய்மை வறண்டு போவது இல்லை. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார்.
1. அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:
தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள்.
செல்வந்தன் தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கையில் உணவுடன் வந்த கணவனைத் தன் கண்களால் இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார். இவ்வாறு கண்டிப்பும் அன்பும் கலந்து அந்த ஏழைத்தாய் வறுமையிலும் தன்மானம் உள்ளவளாகக் காணப்படுகிறாள்.
2. குழந்தைகளுக்குப் பரிமாறுதல்:
குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். பசிமுள் அவள் வயிற்றைக் குத்தியது. சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள் அவள் அனுதாபத்துடன் குழந்தைகளைப் பார்த்து, இப்போ இப்படிச் சாப்டுகிறீர்கள் ராத்திரி என்ன செய்வீர்கள்? என்று உள்ளத்துள் வருந்துவதால் அன்புத்தாய் ஆகிறாள்.
3. மனிதநேயம் புரிந்தாள்:
அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர் உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள்.
4. நாய்க்குட்டிகளை விரட்டுதல்:
சாப்பிடும் நேரத்தில் தொந்தரவு செய்த நாய்க்குட்டிகளைக் குரலிட்டபடியே கையைத் தூக்கி துரத்தினாள். ஒரு காலைத் தூக்கியபடியே ஓடின. நாய்க்குட்டி ஒலி எழுப்பியது.
5. சுவைத்து உண்டாள்:
தட்டை குழந்தையைப் போல மடியில் வைத்துக்கொண்டு உணவை வாய்க்குள் போட்டாள். இவ்வளவு ருசியாய் அவள் சாப்பிட்டதாய் நினைவில்லை. உண்டு உண்டு அந்த சுவையில் சொக்கி லயித்துக்கொண்டிருந்தாள். நாயின் ஒலி அவளைச் சுண்டி இழுத்தது. பாசத்தில் பரிதவித்து ஓடுகிறாள்.
6. நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்:
எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது
முடிவுரை:
வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார்.