Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.4 மனித யந்திரம்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.4 மனித யந்திரம்
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.4 மனித யந்திரம்
கற்பவை கற்றபின்
Question 1.
வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த யாரேனும் ஒருவரைப் பற்றிய செய்தியை அறிந்து மகத் வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர் ஜி.டி.நாயுடு.
ஜி.டி.நாயுடு கோவை மாவட்டத்தில் கலங்கல் என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறந்து ஓராண்டுக்குள் அன்னையை இழந்தார். நான்கு வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மிகுந்த சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் கொண்டவராக விளங்கியவர், தன் மாமனுடைய பாதுகாப்பில் வளர்ந்தார்.
திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் செய்த குறும்புத்தனத்திற்காக இவரது மாமன் இவரைத் தந்தையிடமே சேர்ப்பித்தார். தந்தை கோபால் சுவாமி ஒரு 3 விவசாயி. மகனைத் தனது தோட்டத்திலேயே காவல்காரனாக இருக்கச் செய்தார்.
ஜி.டி. நாயுடு ஒவ்வொரு நாளும் தமிழ் நூல்களைப் படித்து கல்வியறிவைப் பெற்றார். இளமைப்பருவம் அடைந்தபோது ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட துண்டுக் காகிதம் ஒன்று அவருக்குக் கிடைத்தது. ஆங்கிலம் படிக்கத் தெரியாததால் ஆங்கிலம் அறிந்தவரிடம் காட்டினார். அது வலி நிவாரண தைலப்புட்டியின் விளம்பரம் என்பதை அறிந்தார். அமெரிக்கக் கம்பெனியின் தயாரிப்பான அந்த மருந்தை வரவழைத்து வெற்றிகரமாக விற்பனை செய்தார். கடிகாரம், ஹார்மோனியப் பெட்டி மற்றும் சில சில்லறைப் பொருள்களையும் தருவித்து விற்பனை செய்தார்.
ஒருநாள் கலங்கல் கிராமத்தில் லங்காஷியர் என்ற வெள்ளைக்காரத் துரையிடம் இருந்து மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கி அதன் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டார். ஸ்டென்ஸ் துரை என்பவர் இவருக்குப் பேருந்து ஒன்றை வழங்கி சொந்தமாகத் தொழில் செய்ய ஊக்குவித்தார். முதன்முதலில் ஒரு பஸ்சை பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் ஓட்டியவர் இவரே. தன்னுடைய கம்பெனிக்கு , ‘யுனைடெட் மோட்டார் சர்விஸ்’ என்று பெயர் சூட்டினார்.
வெளிநாடுகளுக்குச் சென்றார். பல தொழிற்சாலைகளைப் பார்வையிட்டு அதன் நுட்பங்களை அறிந்தார் ஜி.டி. நாயுடு.
தெரிந்து தெளிவோம்
மாகாணி, வீசம் போன்றவை அக்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப்பெயர்களாகும். அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணயப்பெயர்கள் ஆகும். பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய். அதனால்தான் இன்றும் பேச்சுவழக்கில் அரை ரூபாயை எட்டணா என்றும் கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றனர்.
மதிப்பீடு
Question 1.
மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.
Answer:
நான் ஒருஸ்டோரில் குமாஸ்தாவாக நாற்பத்தைந்து ஆண்டுகளாகப் பணிபுரிகின்றேன். கடையில் வரவு செலவு வளர்ந்தது. அதேபோல் எனக்குக் கவலையும் வளர்ந்தது. குத்து ‘விளக்கடியில் கணக்கு பார்த்த நான் இப்போது மின்சார விளக்கில் கணக்கு பார்க்கிறேன்.
தினமும் ஆற்றில் குளியல், நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம் என நான் வேலைக்குச் செல்லும் காட்சி பழுதுபடாத இயந்திரத்தை நினைவுபடுத்தும். நான் சாதுவாக இருப்பேன். என்னைப் பாதுகாத்துக் கொள்ள உண்மை , நாணயம் முதலிய பழக்கங்களை உறுதியாக மேற்கொள்வேன்.
இவ்வாறு இருந்த என் மனதில் ஆசை துளிர்விட்டது. மாடு கன்று வாங்க வேண்டும், அடகு வைத்த நிலத்தைத் திருப்ப வேண்டும், ஒரு மீனாட்சி ஸ்டோர் வைத்து இஷ்டப்படி ஆட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. அதுமட்டுமா? கொழும்புக்குப் போய்விட்டு ஆடம்பரமாகத் திரும்ப வேண்டும், எதிரே வருபவர்கள் அண்ணாச்சி சௌக்கியமா? என்று கேட்க வேண்டும் !
தினசரி பணப்புழக்கம் என் கையில்தான். ராத்திரியோடு ராத்தியாகக் கம்பி நீட்டிவிடலாம் என்று எண்ணினேன். சுப்புவின் கணக்கு பற்றிச் சிந்தித்தேன். ராமையாவின் பேரேட்டைத் திருப்பிக் கூட்டலாம் என்றால் என் மனம் கணக்கில் லயிக்கவில்லை.
பெட்டிச் சொருகை இழுத்து செம்பு, நிக்கல், வெள்ளி என்று பாராமல் மடமடவென்று எண்ணினேன். நாற்பதும், சில்லறையும் இருந்தது. எனது மடியில் எடுத்துக் கட்டிக் கொண்டேன். விளக்கை அணைத்தேன். கதவைப் பூட்டினேன். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றேன். பத்தேகால் அணாவைக் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். தூத்துக்குடி இரயிலில் சன்னலோரத்தில் உட்கார்ந்தேன்.
அங்கு வந்த என் நண்பரான ரயில்வே போலீஸ் கலியாண சுந்தரம் “ஏது இந்த ராத்திரியில்” என்றார். நான் அவரைப் பார்க்கவில்லை. அவருடைய காக்கி உடையைத்தான் பார்த்தேன். “தூத்துக்குடி வரை” என்று வாய் என்னையறியாமல் கூறியது.
எனக்கு நாக்கு வறண்டது. கண்கள் சுழன்றன. சோடா குடித்தேன். கண்ணை மூடினேன். கலியாணசுந்தரம் பார்த்துவிட்டான் ! நாளைக்கு என் குட்டு வெளிப்பட்டுப் போகும் எனத் தோன்றியது. ரெயிலை விட்டு இறங்கினேன் . நேராக ஸ்டோருக்குச் சென்றேன். எடுத்த சில்லறையைப் பெட்டிக்குள் வைத்தேன். என் கணக்கில் பதினொன்றே காலணா என்று எழுதினேன்.
ஸ்டோரை மூடிவிட்டுப் புறப்பட்டேன். முதலாளி வீட்டிற்குச் சென்றேன். அவர் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டார். “இல்லே, சோலி இருந்தது. எம்பத்துலே இன்னிக்கி பதினொண்ணே காலணா எழுதியிருக்கேன்,” என்றேன். நாவறண்டு போனது. கண்ணை மூடிக்கொண்டு உறங்கிய முதலாளியைச் சற்று நேரம் பார்த்துவிட்டு மெதுவாக நடந்தேன்.
ஆசிரியர் குறிப்பு
சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். சில திரைப்படங்களுக்குக் கதை, உரையாடலும் எழுதியுள்ளார்.
கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒருநாள் கழிந்தது போன்றன இவரது சிறுகதைகளுள் புகழ்பெற்றவை. மணிக்கொடி இதழில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.