Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம்
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம்
கற்பவை கற்றபின்
Question 1.
முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தைப் போல நீங்கள் யாருக்குக் கடிதம் எழுத விரும்புகிறீர்களோ அப்படியொரு ஒரு கடிதம் எழுது.
Answer:
தங்கைக்கு…..
அன்புள்ள தங்கைக்கு அண்ணா எழுதுவது,
நலமா? பதின்பருவத்தில் இருக்கும் உனக்கு இக்கடிதம் மூலம் சில கருத்துகளை தெரிவிக்கவும், சிலவற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
நாம் சிறு வயதில் இருக்கும் போது பல கஷ்டங்களை அனுபவித்தது உண்டு. துன்பங்களிலும், வறுமையிலும், துவண்டு போகாத நம் தந்தை கண்ணெனத் தகும் கல்வியை எனக்குத் தடையின்றி தந்தார். நீயும் இன்று படித்துக் கொண்டிருக்கிறாய். நானும் பணியில் சேர்ந்து விட்டேன். நான் உழைக்கிறேன் ஓய்வெடுங்களென்றால் நம் தந்தை அதற்கு உடன்படுவதில்லை.
நம் பெற்றோரின் உழைப்பின் பயனாகிய நல்வாழ்வை நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அன்புத் தங்கையே நீ பத்திரமாகவும், பக்குவமாகவும் இருக்க வேண்டிய தருணம் இது. கல்வியிலும் நம் குடும்ப நிலையிலும் மட்டுமே உன் கவனம் இருத்தல் வேண்டும்.
கவனச் சிதறல்கள் ஏற்படா வண்ணம் நல்ல புத்தகங்களை வாசி, பெற்றோரை நேசி, இறைவனை மறவாது வழிபடு. நற்பண்புகளை வளர்த்துக்கொள். பெண்ணிற்கு எதற்குப் பணி? என்று வீட்டிலே இருந்து விடாதே. அடுத்த ஆண்டு உன் பட்டப்படிப்பு முடிந்து விடும் அல்லவா! உனக்கு பிடித்தமான பணியைச் செய்ய உன்னை ஆயத்தப்படுத்திக் கொள். பொருளாதார சுதந்திரமும், சமூக பாதுகாப்பு வழங்குவதும் கல்வியும், பணியுமே. நாளை உன் பிறந்த நாள் அல்லவா? அன்புத் தங்கையே வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் அண்ணன்
இரகு. இரா
Question 2.
வகுப்பில் நீங்கள் தேர்ந்தெடுத்த நண்பனின் சிறந்த பண்பைப் பாராட்டியும், அவர் மாற்றிக் கொள்ள வேண்டிய பண்பையும் பெயரைக் குறிப்பிடாமல் கடிதமாக எழுதிப் படித்துக் காட்டுக.
Answer:
அன்புள்ள நண்பா,
உன் நற்பண்பை பாராட்டும் வகையிலும் நீ உன்னில் இருந்து நீக்க வேண்டிய, மாற்றிக் கொள்ள வேண்டிய பண்புகளைக் குறித்தும் நீ உணர்ந்து கொள்ளும்படியும், உணர்த்தும் படியும் இம்மடலை வரைந்து வாசிக்கிறேன்.
நண்பா உன்னை எண்ணி பார்க்கும் போதெல்லாம் என்னுள் மகிழ்வும், பெருமிதமும் ஊற்றெடுக்கும். ஆம் நீ அனைவருக்கும் உதவி செய்யும் நற்பண்பினைப் பெற்றிருக்கிறாய் அல்லவா! அதை நினைத்துத்தான் பெருமிதம் பொங்கும்.
பிறருக்குத் தாமாகவே ஓடிச் சென்று உதவும் பண்பு, எல்லோரிடத்திலும் இருப்பதில்லை. ஆனால் நீ இந்த பண்பை இயல்பிலே பெற்றிருப்பதால் நல்ல நண்பர்கள் உனக்குக் கிடைத்து இருப்பதோடு, பலருடைய பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளாய் பாராட்டுக்கள்.
அதேவேளையில், நீ திருத்திக் கொள்ளும் பொருட்டு உன்னிடம் உள்ள ஒரு சிறு குறையைச் சுட்டிக் காட்டுவது நல்ல நண்பனாகிய என் கடமை எனக் கருதுகின்றேன்.
மகிழ்ச்சியாக உணவருந்திக் கொண்டிருக்கும் போது சிக்கிக் கொண்டு எரிச்சல் தரும் மிளகாய் போல் உன்னிடம் முன்கோபமாகிய குணம் உள்ளது. நாம் எத்தனை நன்மைகள் செய்தாலும் நம்மிடம் உள்ள சினம் என்னும் குணம் எல்லா நற்பண்புகளையும் அழித்து விடும்.
உலகத்தாருக்கும் நாம் செய்த நன்மைகளை, நம் சினமானது மறைத்து விடும். நற்பண்பு வெளியில் தெரியாமல் நம் எதிர்மறை குணம் மட்டுமே பேசு பொருளாக மாறி விடும் எனவே அன்பு நண்பா “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியை” நீ மாற்றிக் கொண்டால் உன்னத மனிதனாய் பேரும், புகழும் பெறுவாய்.
வாழ்த்துகள்.
அன்புடன் ஆருயிர் நண்பன்,
……………
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
Question 1.
மொழியின் விரல் பிடித்து நடக்க பழகிக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு நா. முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை:
கடித செய்தி என்பது உயிர்ப்புள்ள மொழி. செய்தியை அளிப்பவருக்கும், பெறுபவருக்குமான உறவுப் பாலத்தை உறுதியாக்குகிறது. தாயுமானவனாகத் திகழ்ந்த முத்துக்குமார் அவர்கள் தம் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அமைந்துள்ள செய்திகளை அறிவோம்.
குழந்தைப் பருவமும் – உலக வாழ்வும்:
என் செல்லப் பூங்குட்டியே! நீ குழந்தையாய் இருந்தாய்; அழுதாய்; சிரித்தாய்; குப்புறக்கவிழ்ந்து தலைநிமிர்ந்து, சாகசம் கொண்டாடினாய். தரையெல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய்; எழுந்தாய்; விழுந்தாய்; நடந்தாய்; ஓடினாய்.
இந்த உலக வாழ்வும் இப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக்கவிழ்ந்தும், தலைநிமிர்ந்தும் சாகசம் செய்தல் வேண்டும். தவழ வேண்டும், எழவேண்டும், விழவேண்டும், மீண்டும் எழ வேண்டும், இந்த நாடகத்தை நீ வெவ்வேறு வடிவங்களில் உலக வாழ்வில் நடிக்கத்தான் வேண்டும்.
அனுபவமே கல்வி:
கல்வியில் தேர்ச்சி கொள்ள வேண்டும், அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவக் கல்வியே இவ்வுலகில் வெற்றியுடன் வாழ பயன்படும் சூத்திரம் ஆகும்.
அன்பாக இரு:
எங்கும், எதிலும் எப்போதும் அன்பாய் இரு. அன்பை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு. உறவுகளை விட மேன்மையானது நட்பு மட்டுமே, உன் அன்பால் நல்ல நண்பர்களைச் சேர்த்துக் கொள். உன் வாழ்வு அன்பாலும், நட்பாலும் நேராகும்.
உனக்கான காற்றை நீயே உருவாக்கு:
என் மகனே மாநகரத்தில் நீ வாழ்க்கை முழுக்கக் கோடைகாலங்களையும், வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். எப்போதும் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறி கொண்டிருக்க முடியாது. உனக்கான காற்றை நீயே உருவாக்கு.
புத்தகங்களை நேசி:
புத்தகங்களை நேசிக்கத் தவறாதே. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள் உன் உதிரத்தில் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
முடிவுரை:
இக்கருத்துக்கள் அனைத்தும் முத்துக்குமாரின் மகனுக்கு மட்டுமல்ல. இதனைப் படிக்கின்ற ஒவ்வொரு மாணவனுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், வளர்வதற்கும், உயர்வதற்கும், ஏற்ற கருத்துக்கள் ஆகும் என்பதை எவராலும் மறுக்க இயலாது.